சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரண செய்தி வெளியானதைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராகக் கடந்த ஆண்டு மிகப் பெரிய மாணவர் போராட்டம் நடந்தது. கட்டுக்கடங்காமல் போன போராட்டத்தின் விளைவாகப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த ‘இன்குலாப் மஞ்சா’ (Inqilab Mancha) மாணவர் இயக்கத்தின் தலைவர் 32 வயதான ஷெரீப் உஸ்மான் ஹாடி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்துள்ள இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவந்தார். வரும் பொது தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட போவதாகவும் அறிவித்திருந்தார்.
தேர்தல் தேதி அறிவித்த மறு நாள், டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கியபோது முகமூடி அணிந்த மர்ம நபர்களால் ஹாடி சுடப்பட்டார். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சிங்கப்பூரில் அவசர மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஹாடி, கடந்த வியாழக் கிழமை மரணமடைந்தார்.
இதனையடுத்து நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள முக்கிய சதுக்கத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஹாடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய மாணவர்கள் தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஹாடியைக் கொலை செய்த குற்றவாளிகள் இந்தியாவுக்குத் தப்பிவிட்டதாகக் கூறி, நள்ளிரவில் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ராஜ்ஷாஹி, குல்னா சிட்டகாங்கில் உள்ள இந்திய துணை தூதரகங்களை முற்றுகையிட முயன்றனர். பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்திக் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிப் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வங்கதேசத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரின் வீட்டின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், ஹாடியை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளை ஒப்படைக்கும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிராகவும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். மேலும் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் கட்சிக்குச் சொந்தமான சொத்துக்களையும் போராட்டக்காரர்கள் தாக்கி வருகின்றனர்.
அந்நாட்டின் முன்னணி நாளிதழ்களான (Prothom Alo) புரோதோம் அலோ மற்றும் (The Daily Star), கதி டெய்லி ஸ்டார் ஆகியவை இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள போராட்டக்காரர்கள் அந்தப் பத்திரிக்கை அலுவலகங்களுக்குத் தீவைத்துள்ளனர். தீப்பற்றி எரியும் கட்டிடத்துக்குள் சிக்கிய 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களையும் ஊழியர்களையும் தீயணைப் படை வீரர்கள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த வன்முறைக் காட்சிகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஹாடியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள வங்கதேச அரசியல் கட்சிகள் அனைத்தும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென வேண்டுகோள் வைத்துள்ளன.
ஹாடியின் மரணம், தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பு என்று தெரிவித்துள்ள வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பயம், பயங்கரவாதம் ரத்தக் களரியின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் ஹாடியின் மரண நாள் இனி தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், ஆதாரமே இல்லாத நிலையில் இது தொடர்பாக இந்திய தூதரை அழைத்து வங்கதேச அரசு விளக்கம் கேட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே புதிய ராஜதந்திர சிக்கலும் பிரச்னையும் உருவாகி உள்ளது. முன்னதாக ஹாதி சுடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும், சதிகாரர்களின் நோக்கம் தேர்தலைத் திசைதிருப்புவதாகும் என்றும் முகமது யூனுஸ் தெரிவித்திருந்தார்.
















