எஸ்ஐஆர் பணிக்கு பிறகு தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
பிகாரைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்றன.
இந்த பணிகள் டிசம்பர் 4 ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில் வாக்காளர்கள், படிவங்களை நிரப்பி வழங்குவதற்கு இரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 14 ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 97லட்சத்து 37 ஆயிரத்து 831 பெயர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில் தற்போது, 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். அதில், 2 கோடியே 77 லட்சத்து 6 ஆயிரத்து 333 பெண் வாக்காளர்களும், 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 ஆண் வாக்காளர்களும் உள்ளனர்.
இறந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேரும்,இடம் பெயர்ந்தவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல், இரட்டைப்பதிவு கொண்ட வாக்காளர்கள் 3 லட்சத்து 39 ஆயிரத்து 278 பேரும் என மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழகத்தில் மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் அல்லது இணையத்தில் கூட விண்ணப்பிக்கலாம் எனவும் கூறினார்.
மேலும், இரண்டு வாரங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவிருப்பதாகவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
















