பணி நிரந்தரம் கோரி போராடி வரும் செவிலியர்களை தனியார் மண்டபத்தில் இருந்து இரவோடு இரவாக போலீசார் வெளியேற்றியதால், 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். இதனை தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்து ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதனிடையே, தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட செவிலியர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் முயற்சியில் போலீசார் ஈடுபட்ட நிலையில், தனியார் மண்டபத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் தனியார் மண்டபத்தில் தங்கியிருந்த செவிலியர்களை போலீசார் கூண்டோடு வெளியேற்றிய நிலையில், கொட்டும் பனியில் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் செவிலியர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஊரப்பாக்கத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்றனர்.
















