உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் முயற்சி, நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் எனக்கூறி குடியரசு தலைவருக்கு இளம் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சில எதிர்கட்சிகளால் பதவி நீக்க தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட இளம் வழக்கறிஞர்கள், குடியரசு தலைவருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக முன்மொழியப்பட்ட பதவி நீக்கத் தீர்மானம் முற்றிலும் நியாயமற்றது என தெரிவித்துள்ளனர். 2017 முதல் 2025ஆம் ஆண்டு வரை 73 ஆயிரத்து 505 வழக்குகளை வெற்றிகரமாக முடித்து நீதிபதி சுவாமிநாதன் நீதித்துறையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
நீதித்துறையைப் பாதுகாக்கவும், இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் குடியரசு தலைவர் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் இளம் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
















