ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தியாளர் சந்திப்பின்போது, ரஷ்யப் பத்திரிகையாளர் தனது காதலியிடம் திருமணம் செய்ய முன்மொழிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ரஷ்யாவில் அதிபர் புதினின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடத்தப்படும் இந்தச் செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சில மணி நேரம் தொடர்ந்து நடக்கும் இந்தச் செய்தியாளர் சந்திப்பில், ஏராளமான செய்தியாளர்கள் பங்கேற்று தங்கள் கேள்விகளை ரஷ்ய அதிபரிடம் எழுப்புவார்கள். அப்படி நடந்த செய்தியாளர் சந்திப்பில் அரங்கேறிய காதல் திருமண முன்மொழிவு, சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
23 வயதான செய்தியாளர் கிரில் பஜானோவ் “நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நேரலை ஒளிபரப்பில், இந்த எதிர்பாராத நிகழ்வு பார்வையாளர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது.
பின்னர் கிரில் பஜானோவின் காதலி அவரது முன்மொழிவுக்கு ஒப்புக் கொண்டதாக நெறியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு ரஷ்ய அதிபர் புதினும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து கிரில் பஜோனா தனது திருமண விழாவிற்கு வருகை தரும்படி புதினுக்கு அழைப்பு விடுத்தார். அதற்குப் புதின் திருமணம் செய்துகொண்டு ஜோடியாக மாஸ்கோ க்ரெம்ளின் மாளிகைக்கு வரும்படி தம்பதிக்கு அழைப்பு விடுத்தார்.
















