யோகா, ஒட்டுமொத்த உலகிற்கும் ஆரோக்கியம், சமநிலை மற்றும் நல்லிணத்திற்கான பாதையை காட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவத்திற்கான 2-வது உலகளாவிய உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சில முக்கிய முன்னெடுப்புகளைத் தொடங்கி வைத்தார். ஆயுஷ் துறையின் சேவைகளை ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் தளமான ‘மை ஆயுஷ் போர்ட்டல்’, ஆயுஷ் தயாரிப்புகளின் தரத்தை உலகளவில் உறுதிப்படுத்துவதற்கான ‘ஆயுஷ் மார்க்’ தர அடையாள முத்திரை, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் அஸ்வகந்தா நினைவு தபால் தலை ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
முக்கியமாக, டெல்லியில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, 2021-2025ம் ஆண்டுகளுக்கான யோகா மேம்பாட்டிற்காகச் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.
பின்னர், ஆயுஷ் அமைச்சகம் சார்பில் “From Roots to Global Reach: 11 Years of Transformation in Ayush” என்கிற புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இறுதியாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தார்.
குறிப்பாக யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமின்றி, அது மனிதகுலத்திற்கு ஆரோக்கியம், சமநிலை மற்றும் நல்லிணக்கத்தைக் கற்பிக்கும் ஒரு உன்னத வழிமுறை எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா அறிவித்தது இந்தியாவின் பெருமை எனக்கூறிய பிரதமர் மோடி, ஜாம்நகரில் அமைக்கப்பட்டுள்ள WHO உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
















