கன்னியாகுமரி கடல் பகுதியில் மூன்று நாட்டு படகுகள் மீது கப்பல் மோதிய விபத்தில் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 2 விசைப்படகுகளிலும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு விசைப்படகிலும், கடந்த 17 தேதி தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 126 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சைப்ரஸ் நாட்டை சேர்ந்த எண்ணெய் கப்பல் விசைப்படகுகள் மீது மோதியது. விபத்து நடந்த பிறகும் கப்பல் மாலுமி, கப்பலை நிறுத்தி மீனவர்களை காப்பாற்ற முயற்சிக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் மூன்று படகுகள் சேதமடைந்த நிலையில், பத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் உதவியோடு, விபத்தில் சிக்கிய மீனவர்கள் தேங்காய் பட்டினம் துறைமுகம் வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில், கப்பல் மற்றும் மாலுமி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
















