அகமதாபாத்தில் நடந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்துக்கு விமானிகளைக் குறை சொல்வது அருவருப்பானது எனப் போயிங் முன்னாள் அதிகாரி பியர்சன் கூறியுள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி, குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்குக் கிளம்பிய போயிங் 787 ட்ரீம்லைனர் ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கித் தீப்பிடித்து எரிந்தது.
இந்தப் பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் 10க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மரணமடைந்தனர்.
ஓடுபாதையில் இருந்து போதுமான உயரத்துக்கு மேலே எழும்ப முடியாத சுழலில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்றும், லெண்டிங் கியர் பழுது காரணமாக விமானச் சக்கரம் செயல்படாமல் போயிருக்கலாம் என்றும் விமானத்தின் மீது பறவை மோதி இருக்கலாம் என்றும் விமான என்ஜின் இயக்கத்தில் தடை ஏற்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கடந்த ஜூலை மாதம் Aircraft Accident Investigation Bureau வெளியிட்டது. புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானத்தின் இரு என்ஜின்களுக்குமான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் இரண்டும் திடீரென “கட்-ஆஃப்” நிலைக்கு மாறி, என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்றதால் சில வினாடிகளிலேயே விமானம் விபத்துக்குள்ளானது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
இது விமானிகளின் கவனக் குறைவே விமான விபத்துக்குக் காரணம் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. இந்த முதற்கட்ட அறிக்கையை “கொடூரமானது” என்று விமர்சித்துள்ள முன்னாள் போயிங் மூத்த மேலாளர் பியர்சன், விமானிகளைக் குற்றம் சொல்வதை கடுமையாகக் கண்டித்துள்ளார். போயிங்கின் தரக் கட்டுப்பாட்டு தோல்விகள் மற்றும் பலவீனமான ஒழுங்குமுறை அமைப்புக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
விமானங்கள் AI மூலம் இயங்கும் என்று கூறப்பட்டாலும், இன்றும் விமானங்கள் ஊழியர்களால் தான் கட்டமைக்கப் படுகின்றன என்று கூறியுள்ள பியர்சன் உற்பத்தி, தரக் கட்டுப்பாடு மற்றும் விநியோகச் சங்கிலி ஆகிய பணிகளில் உள்ள ஊழியர்கள் அதிகப்படியான அழுத்தத்தில் உள்ளனர் என்றும் விவரித்துள்ளார்.
மின்சார அசுரன் என்று அழைக்கப்படும் நம்பமுடியாத அளவுக்குச் சிக்கலான விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர், வடிவமைக்கப்பட்ட பிறகு நடந்த செயல்பாட்டு சோதனைகளின் போது மீண்டும் மீண்டும் தோல்விகளையே சந்தித்ததாகப் பியர்சன் விளக்கியுள்ளார். இறந்த விமானிகள் மீது பழி சுமத்துவதற்கு முன்பாகச் சாத்தியமான அமைப்புரீதியான கோளாறுகள் மற்றும் தோல்விகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முதற்கட்ட அறிக்கையில், விமானிகள் வேண்டுமென்றோ தற்செயலாகவோ தவறு செய்தார்கள் என்று மறைமுகமாக உணர்த்துவதற்காகவே விமானிகளின் உரையாடலின் மிகச் சிறிய பகுதி மட்டுமே வெளியிடப்பட்டதாகவும் பியர்சன் கூறியுள்ளார். Aircraft Communications Addressing and Reporting System மற்றும் Airport Handling Manual என்ற அமைப்புகளின் தரவுகள் எதுவும் இந்த அறிக்கையில் இல்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ள பியர்சன், விபத்து விசாரணை செயல்முறை நவீன விமானங்களின் தொழில் நுட்பத்துக்குப் பொருந்தவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.
















