வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் பதற்றம் நீடித்து வருகிறது.
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கலவரம் வெடித்தது.
இதை பயன்படுத்தி, ஹிந்து இளைஞரை ஒரு கும்பல் கொடூரமான முறையில் அடித்து கொன்று, அவர் உடலை சாலையில் போட்டு தீவைத்து எரித்தது. பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், வங்கதேசமே கலவர பூமியாக மாறியது.
இதனால் டாக்காவில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஹாதியின் இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு, நாடாளுமன்றம் முன்பு திரண்ட வன்முறையாளர்கள், உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி, பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
















