கடந்த ஜனவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்துச் சிதறிய போது, கரீபியன் வான்பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்க விமான ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலம் 10 நிமிடங்களுக்கு உள்ளாகவே தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கரீபியன் கடற்பரப்பின் மேல் வெடித்துச் சிதறியது. இதன் தொடர்ச்சியாக ஸ்டார்ஷிப் விண்கலத்தில் பாகங்கள் வான் பரப்பில் சிதறியதால், அந்த இடம், பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு தகுதியற்றதாக மாறியது என அமெரிக்க விமான ஆணையம் தற்போது வெளியிட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறுதலாக அந்தப் பகுதியில் அப்போது பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் விமானி, உச்சபட்ட எச்சரிக்கையான May day அழைப்பை Air Traffic Control பகுதிக்கு அனுப்பியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த விமானம் மட்டுமின்றி, போர்டோ ரிகோ நகருக்கு சென்ற ஜெட்புளூ நிறுவன விமானம், கரீபியன் கடற்பரப்பு வழியாகத் திட்டமிட்டபடி செல்லாமல் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதும் தற்போது அம்பலமாகி உள்ளது.
இதன் காரணமாக அந்த விமானத்தின் எரிபொருள், பயணிகளுக்கான குடிநீர் உள்ளிட்டவை எப்போது வேண்டுமானாலும் தீர்ந்து போகும் சூழலும் உருவானதாக ஜெட்புளூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
















