பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாகத் தவிர்க்க தமிழக அரசால் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரம் தற்போது என்ன நிலையில் இருக்கிறது. அதன் தற்போதைய நிலைகுறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இன்றைய நவீன உலகில், பிளாஸ்டிக் பயன்பாடு பெருகிவிட்டது… ஓட்டல்கள் துவங்கி, சில்லறை விற்பனை கடைகள் வரை அனைத்திலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது.
அதனை தவிர்ப்பதற்காகக் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டதுதான் மீண்டும் மஞ்சப்பை திட்டம். மக்களிடையே துணிப்பை பழக்கத்தை கொண்டுவர விளம்பரங்களை செய்து, திட்டத்தை வெற்றியடைய தொடக்கத்தில் முனைப்புக் காட்டியது திமுக அரசு.
டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப 10 ரூபாய் செலுத்தினால் மஞ்சப்பையை எளிதில் பெறும் வகையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டன. இந்த திட்டம்குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்ப நாட்களில் ஆர்வம் காட்டிய திமுக அரசு, அதன் பின் வழக்கம்போல் கண்டுகொள்ளாமல், தானியங்கி துணிப்பை இயந்திரத்தை பராமரிக்கும் பணியை மறந்தேவிட்டது.
தானியங்கி துணிப்பை இயந்திரம் மின்சாரம் இல்லாமல் பயன்படாமல் உள்ளதால், அருகில் உள்ள வணிக வளாகங்களில் 50 ரூபாய் கொடுத்துப் பை வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இது போன்று தவறுகள் நடப்பதாகவும், தானியங்கி துணிப்பை இயந்திரத்தை முறையாகப் பராமரித்து வந்தால் மீண்டும் பெரும் வரவேற்பை பெறும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
















