சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன? இது குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
எங்கும் பார்த்தாலும் பனிப்பொழிவு.. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பனி போர்த்திய பகுதிகள். வாகனங்கள் மற்றும் வீடுகளை முழுவதுமாக மூடிய உறைப்பனி. நீங்கள் பார்க்கும் இந்த இடம் காஷ்மீரோ அல்லது ஏதேனும் ஐரோப்பிய நாடோ இல்லை. பாலைவன நாடான சவுதி அரேபியாதான் இது. அரேபியா என்றாலே அனைவருக்கும் சுட்டெரிக்கும் வெயிலும், ஆண்டு முழுவதும் நீடிக்கும் வறட்சியும்தான் நினைவுக்கு வரும்.
ஆனால், அந்தப் பிம்பத்தை மாற்றிக்கொண்டு, பனிபொழியும் நாடாகத் தற்போது மாறியுள்ளது சவுதி அரேபியா. சவுதி அரேபியாவின் வெப்பநிலையில் பெரும் வீழ்ச்சி இருக்கும் என அந்நாட்டு தேசிய வானிலை மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.
பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே, நியோம் பகுதியில் உள்ள ட்ரோஜெனா ஹைலேண்ட்ஸிலும், Tabuk மாகாணத்திலும் வெப்பநிலை குறைய தொடங்கியது.
அடுத்த சில நாட்களில் ஜபல் அல்-லாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. பின்னர், அடுத்தடுத்து பல பகுதிகளிலும் பூஜ்ஜியம் டிகிரிக்கும் கீழாக வெப்பநிலை பதிவாகி, பனிப்பொழிய தொடங்கியது. பிர் பின் ஹெர்மாஸ், அல்-அய்னா, அம்மார், அல்உலா கவர்னரேட், ஷக்ரா உள்ளிட்ட பகுதிகளில் மழையும் பதிவானது. குறிப்பாக, சவுதியின் மேற்கே உள்ள துவைக் மலைத்தொடரில் இருந்து ரியாத் பகுதி வரையுள்ள பாலைவனத்தில் கடந்த சில நாட்களாகப் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
பல இடங்களில் பனிச்சறுக்கு விளையாடும் அளவுக்கு உறைபனி காணப்படுகிறது. ஆண்டுதோறும் வெறும் வெயிலை மட்டும் பார்த்துப் பழகிய சவுதி மக்கள், இந்தத் திடீர் பனிப்பொழிவால் உற்சாகம் அடைந்துள்ளனர். பனிப்பொழியும் பகுதிகளுக்குச் சென்று நேரம் செலவிட்டு மகிழ்ந்தும் வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பனிப்பொழிவு சவுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தேசிய வானிலை ஆய்வு மையத்தின் செய்தித்தொடர்பாளரான ஹுசைன் அல்-கஹ்தானி, சவுதியின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் திடீரென மிகவும் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியதே இந்தத் திடீர் பனிப்பொழிவுக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கத்திற்கு மாறாக இப்படி குளிர்ந்த காற்று வீசியதற்கு காலநிலை மாற்றம்தான் காரணம் என ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனை சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொண்டு, கடந்து செல்ல முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மை காலமாகவே, காலநிலை மாற்றத்தால் எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தேறி வருகின்றன. அமேசான் காடுகள் ஆக்சிஜனுக்கு பதிலாக, கார்பனை வெளியேற்றி வருவதாக அண்மையில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். குறைந்த வெப்பநிலை கொண்டிருக்க வேண்டிய கடல்பகுதியில் வெப்பம் அதிகரித்ததால்தான் டிட்வா உள்ளிட்ட புயல்கள் ஏற்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதுபோன்றதொரு தலைகீழான மாற்றம்தான், தற்போது சவுதியிலும் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுவது ஒன்றுதான், “காலநிலை மாற்றத்தின் மற்றொரு எச்சரிக்கை மணி..”
















