ரஷ்ய ராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த இந்திய மாணவர், உக்ரைன் சிறையில் இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறு பிரதமர் மோடிக்கு உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரை அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து ரஷ்ய இராணுவத்தில் 127 இந்தியர்கள் இருப்பதாகவும் அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12 என்றும், காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 18 என்றும் மீதமுள்ளவர்கள் அனைவரும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம், ரஷ்ய இராணுவத்தில் இருந்த குஜராத்தைச் சேர்ந்த 23 வயதான இந்திய மாணவர், உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்துள்ளதாக உக்ரைனின் “தி கீவ் இன்டிபென்டன்ட்” நாளிதழிலில் செய்தி வெளிவந்தது.
மேலும், அந்த இந்திய மாணவர் பேசிய வீடியோவையும் உக்ரைன் அரசு வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், குஜராத் மாநிலம் மோர்பியைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என்று தன்னை அறிமுகப் படுத்தியுள்ள அந்த இந்திய மாணவர், ரஷ்யாவின் ஐடிஎம்ஓ பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழி மற்றும் கலாச்சாரப் படிப்பை மேற்கொள்ள மாணவர் விசா மூலம் ரஷ்யாவுக்கு வந்ததாகவும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து உக்ரைனில் போரில் கலந்துகொண்டால் சிறை தண்டனை ரத்து செய்யப்படும் என்றும் கூறியதால், ரஷ்ய சிறையில் இருக்க விரும்பாததால் , உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் முகமது ஹுசைன் கூறியுள்ளார். 16 நாட்கள் ரஷ்ய இராணுவத்தில் பயிற்சி பெற்றபின் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் போர் களத்துக்குச் சென்றதாகவும் மூன்று நாட்களுக்குப் பிறகு ரஷ்ய இராணுவத் தளபதியுடன் சண்டையிட்டதாகவும், தொடர்ந்து உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் முகமது ஹுசைன் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஹுசைனை பேசச் சொல்லி உக்ரைன் ராணுவமே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதே வீடியோவில் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தால் தனக்கு பண வெகுமதி உறுதியளிக்கப்பட்டதாகவும் ஆனால் கடைசி வரை பணத்தைத் தராமல் ஏமாற்றியதாகவும் கூறியுள்ள முகமது ஹுசைன் ரஷ்யாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பாதததால் உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் சிறைக்குச் செல்லத் தயாராக இருந்நதாகவும் கூறியுள்ளார். முன்னதாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி, ஹுசைனிடமிருந்து தனது சகோதரருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அப்போது ரஷ்ய காவல்துறையினரால் தான் கைது செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவித்ததாகவும் அதன் பிறகு ஹுசைனைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று ஹுசைனின் தாயார் கூறியிருந்தார்.
இந்நிலையில், மேலும் ஹுசைன் பேசிய இரண்டு வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்றில் ரஷ்யாவில் போதைப்பொருள் வழக்குகள், சட்டவிரோத வழக்குகள் எனப் பல்வேறு குற்றவியல் வழக்குகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பிருப்பதால் உயர்கல்வி அல்லது வேலைக்காக ரஷ்யா வரும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தனது இரண்டாவது வீடியோவில், தயவு செய்து காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார். ஏற்கெனவே, ரஷ்ய இராணுவத்தில் சேருவதற்கான எந்தவொரு சலுகைகளையும் ஏற்க வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் மிஸ்ரி எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், கட்டாயத்தின் பேரிலோ அல்லது பிற வழிகளிலோ ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்த இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்துவருவதாக குறிப்பிட்டிருந்தார்.
















