நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் சீக்கியர்கள் நடத்திய போராட்டத்தில், மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து இடையூறு விளைவித்ததற்கு சீக்கியத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் உள்ள கிரேட் சவுத் ரோடு பகுதியில் கடந்த 20ஆம் தேதி சீக்கியர்கள் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது ‘நியூசிலாந்தின் உண்மையான தேசபக்தர்கள்’ எனப்படும் அமைப்பை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், சீக்கியர்களின் பேரணியை எதிர்கொண்டு தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் நியூசிலாந்தின் பழங்குடி மக்களான மாவோரி இனத்தவரின் பாரம்பரிய நடனமான ஹக்கா நடனத்தை ஆடத் தொடங்கினர். அப்போது அவர்கள், ‘இது எங்கள் நாடு, இது எங்கள் நிலம், இது இந்தியா அல்ல, நியூசிலாந்து” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர். இந்நிலையில், இது ஒரு தேவையற்ற மற்றும் தூண்டுதலை ஏற்படுத்தும் செயல் என நியூசிலாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
















