வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் உஸ்மான் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஃபைசல் கரீம் மசூத்துக்கு எதிராக அந்நாடு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய பேராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன் பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. மாணவர் போராட்டத்துக்குத் தலைமையேற்று நடத்திய ஷெரீப் உஸ்மான் ஹாடி கடந்த 12-ம் தேதி டாக்காவில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் குதித்ததால் வங்கதேசத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், உஸ்மான் ஹாதியை துப்பாக்கியால் சுட்ட நபர் பைசல் கரீம் மசூத் எனவும், அவர் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் அமைப்பான ‘சத்ர லீக்’ அமைப்பின் முன்னாள் தலைவர் எனவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க டாக்கா நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது. மேலும், நாடு தழுவிய அளவில் தேடப்படும் குற்றவாளியாக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது மசூத்தைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்குச் சுமார் 35 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
















