புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மதுபானம் அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் மற்றும் சிறார்களை அழைத்துச் செல்லத் தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நட்சத்திர விடுதிகள் மற்றும் மதுபான கூடங்களுக்குக் குழந்தைகளையும் அழைத்துச் செல்லப்படுவதை எதிர்த்துக் காமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் அளித்த மனுவில் எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது குழந்தைகளும், 18 வயதுக்குட்பட்டவர்களும் அழைத்துவரப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் அமைந்துள்ள மதுபானம் அருந்தும் இடத்துக்குக் குழந்தைகள் மற்றும் சிறார்களை அழைத்துச் செல்லத் தடை விதித்தது.
மேலும், இதுதொடர்பாகப் புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழக அரசின் உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் குழந்தைகள் நல ஆணையர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















