கொடைக்கானலில் 4வது நாளாகக் காணப்படும் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலையால் ஏற்படும் உறைபனியை ஆச்சரியத்துடன் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடர்ந்து 4வது நாளாக ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதால் உறைபனி காணப்படுகிறது.
கடும் குளிர் காரணமாக உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரங்களில் மக்கள் தீ மூட்டி குளிரை போக்கி வரும் நிலையில், கடுமையான குளிரிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஸ்வட்டர், குல்லா, மப்ளர், கையுறைகள் அணிந்து கொண்டனர்.
இதனிடையே, கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாகக் கொடைக்கானலுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள், ஏரிச்சாலை மற்றும் ஜிம் கானா பகுதியில் நிலவும் உறைபனியை காணக் குவிந்துள்ளனர். மேலும், புல்வெளிகள், செடி, மரங்களில் படர்ந்துள்ள பனிப்பொழிவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
















