டிட்வா புயலின் பாதிப்புகளைச் சமாளிக்க இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிவாரணத் தொகுப்பை இந்தியா அறிவித்துள்ளதாக மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரிஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார். முன்னதாக டிட்வா புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த இலங்கைக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற திட்டத்தின்கீழ் இலங்கை மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் பல்வேறு தொகுப்புகளாக அனுப்பி வைக்கப்பட்டன.
அந்தத் திட்டத்தின் பின்னணியில் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிட்வா புயலுக்கு பிறகு இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்தது இயல்பானதுதான் என்றும், இந்திய ராணுவம் ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைத்து, எட்டாயிரம் பேருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும் கூறினார்.
இந்தியாவின் 450 மில்லியன் டாலர் உதவித் தொகுப்பில் 350 மில்லியன் டாலர் சலுகைக் கடன் மற்றும் 150 மில்லியன் டாலர் மானியங்கள் அடங்கும் என்றும், உள்கட்டமைப்பு, வீட்டுவசதி, கல்வி, விவசாயம், பேரிடர் மீட்பு மற்றும் தயார்நிலை போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளை இது உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
















