சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள் நடத்திய கற்பூர ஆழி ஊர்வலத்தால் சன்னிதானம் விழாக்கோலம் பூண்டது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பணிபுரியம் தேவசம் போர்டு ஊழியர்கள் சார்பில் ஆண்டுதோறும் கற்பூர ஆழி பவனி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மண்டல பூஜையை முன்னிட்டு நடக்கும் கற்பூர ஆழி பவனி வழக்கத்தை விட மிகுந்த பொலிவுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மாலை தீபாராதனைக்கு பின் கோயில் கொடிமரத்தின் முன் வட்டவடிவமான பாத்திரத்தில் கற்பூரம் குவித்து வைத்த நிலையில், கற்பூர ஆழி ஊர்வலத்தை தந்திரி, மேல்சாந்தி, நம்பூதிரி ஆகியோர் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து 2 ஊழியர்கள் 2 பக்கமும் அந்த பாத்திரத்தை அசைத்து அசைத்து சென்றபோது கற்பூரத்தில் இருந்து எரியும் தீபம் மேல்நோக்கி எழுந்தது.
கோயிலை வலம் வந்த ஊர்வலம், மாளிகப்புரம் கோயில் சன்னிதானம் மற்றும் நடைபந்தலை சுற்றி பதினெட்டாம் படிக்கு முன் நிறைவடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
















