வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், அவரின் அரசியல் வாரிசும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் தாய்நாட்டுக்குத் திரும்புகிறார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பும் தாரிக் ரஹ்மானுக்குச் சிறப்பான வரவேற்பு கொடுக்க வங்கதேச தேசியவாதக் கட்சி தயாராகி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வங்க தேச அரசியல் என்பது முன்னாள் பிரதமர்களான ஷேக் ஹசீனாவுக்கும் கலீதா ஜியாவுக்கும் இடையிலான போட்டியாகவே இருந்து வருகிறது.
அந்நாட்டின் தேசிய தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இந்த இருவருமே மாறி மாறி பல ஆண்டுகளாக வங்கதேசத்தின் பிரதமர்களாக இருந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர் போராட்டத்தின் விளைவாக, பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதற்கு மறுநாளே வங்கதேச தேசியவாதக் கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர், அக்கட்சியின் செயல்தலைவர் தாரிக் ரஹ்மான் லண்டனில் இருந்து நாடு திரும்புவார் என்று அறிவித்தார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில்,பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாரிக் ரஹ்மான் வங்கதேசம் திரும்புவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது அவாமி லீக் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்களை முகமது யூனுஸின் இடைக்கால அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைத்துள்ளது.
இன்னொருபுறம், சிறை தண்டனை அனுபவித்து வந்த வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் கலீதா ஜியா விடுவிக்கப்பட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட அக்கட்சியினர் அனைவருக்கும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் ஆதரவுடன் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவதாக குற்றம் சாட்டிய வங்கதேச தேசியவாத கட்சி கடந்த தேர்தலைப் புறக்கணித்தது. வங்கதேசத்தில் ஷரியா சட்டத்தை கொண்டுவர விரும்பும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹெஃபாசத்-இ-இஸ்லாம் ஆகியவற்றுக்கும் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
முழுமையாக இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக, நாட்டின் ஜமாத் விதிகள் மறுசீரமைக்கப்படும் வரை இந்தியாவுக்கு எதிரான ஆட்சி நீடிப்பதையே ஜமாத்-இ-இஸ்லாமி விரும்புகிறது. மேலும் வரும் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் இடம்பெற போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எனவே அவாமி லீக் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் தாரிக் ரஹ்மானின் BNP கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி BNP கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தாரிக் ரஹ்மானே வங்கதேசத்தின் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போகுரா-7 தொகுதியில் கலீதா ஜியாவும், சென்ற தேர்தல்களில் கலீதா ஜியா போட்டியிட்டு வெற்றிபெற்ற போகுரா-6 தொகுதியில் தாரிக் ரஹ்மானும் போட்டியிட உள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம், வங்கதேசத்துக்கான அமெரிக்க தூதர் (Tracey Ann Jacobson) டிரேசி ஆன் ஜேக்கப்சன் லண்டனில் தாரிக்கைச் சந்தித்து, இந்திய-வங்கதேசப் பிரச்சினைகள் குறித்த விரிவாக விவாதித்திருந்தார். அதே நேரத்தில் லண்டன் சென்றிருந்த முகமது யூனுஸும் தாரிக்கை சந்தித்து பேசியிருந்தார். தொடர்ந்து BNP கட்சி பொதுச் செயலாளர் தலைமையிலான குழுவினரும் லண்டன் சென்று தாரிக்கை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
ஏற்கெனவே, விரிவான பிரச்சாரத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ள தாரிக், ஆட்சிக்கு வந்ததும் BNP கட்சி கொண்டுவர இருக்கும் தொடர் திட்டங்களையும் அறிவித்துள்ளார். எனினும் மற்ற இஸ்லாமிய மற்றும் இடதுசாரி பயங்கரவாதிகளுடன் இரகசிய தொடர்புகளை தாரிக் இன்றும் பேணி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
லண்டனில் உள்ள ISI அதிகாரிகளுடனுடனும், பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராஹிம் உடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தாரிக், கடந்த தேர்தலில் ஷேக் ஹசீனா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மாலத்தீவில் நடத்தியது போல INDIA OUT என்ற பிரச்சாரத்தைத் திட்டமிட்டு செயல்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், தேர்தல் வாக்குப்பதிவின்போது, பொது வாக்கெடுப்பையும் ஒரே நாளில் நடத்துவது என்பது “தேர்தல் இனப்படுகொலைக்கு” வழிவகுக்கும் என்றும் ஜமாத்-இ-இஸ்லாமி எச்சரித்துள்ளது. ஆனாலும் ஒரேநாளில் இரண்டையும் நடத்துவதாக முகமது யூனுஸ் அரசு அறிவித்துள்ள நிலையில், தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஜமாத்-இ-இஸ்லாமி ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
தேர்தல் நடக்குமா ? தாரிக் வெற்றிபெறுவாரா? அல்லது தேர்தல் தடுக்கப்படுமா ? இஸ்லாமிய ஷரியத் சட்டம் வங்கதேசத்தில் கொண்டுவரப்படுமா? இது போன்ற பல கேள்விகள் இன்னமும் பதில் இல்லாமல் உள்ளன.
















