திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அதிகாரிகளின் துணையுடன் திமுக நிர்வாகி மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கூறிய பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரும்புலி கிராமத்தை சேர்ந்த திமுக நிர்வாகி பெருமாள் என்பவர் அப்பகுதியில் உள்ள பெரிய ஏரியில் கனிம வளங்களை கடத்துவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் பெரிய ஏரி அருகே குவிந்த கிராமத்தினர் பெருமாளின் ஹிட்டாச்சி மற்றும் ஜேசிபி வாகனங்களை சிறைபிடித்ததோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் மண் கடத்தல் தொடர்பாக முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த பொதுமக்கள் கனிம வளங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
















