மக்களவையில் எம்பிக்கள் தாய்மொழியில் ஆற்றிய உரை நேரலையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு சக உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.
அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவையில் வழக்கமாகப் பேசப்படும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் நீங்கலாக பிற மொழிகளில் 160 உரைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
இதில் மிக அதிகபட்சமாக 50 உரைகள் தமிழிலும், இரண்டாமிடத்தில் 43 உரைகள் மராத்தி மொழியிலும், 25 உரைகள் வங்க மொழியிலும் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவையில் பேசும் எம்பிக்களின் கருத்துகள் சக உறுப்பினர்களுக்கு புரிய, மொழிபெயர்ப்பாளர்கள் இருந்த நடைமுறை முடிவுக்கு கொண்டுவரப் பட்டுள்ளதாகவும், ஆங்கிலம் உள்பட பிற மொழிகளில் நேரலையில் மொழிபெயர்க்கும் வசதியை தற்போது வழங்கி வருவதாகவும் மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
















