கடலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே எழுத்தூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து 2 கார்கள் மீது மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சியைச் சேர்ந்த 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்களுக்கு அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அஞ்சலி செலுத்திய நிலையில், 6 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதேபோன்று, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜரத்தினம், ராஜேஸ்வரி, ஜெயக்குமார் ஆகியோரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
















