நாடு முழுவதும் திருத்தப்பட்ட புதிய ரயில் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுதும் உள்ள 19 மண்டலங்களில், 12 ஆயிரத்து 617 பயணியர் ரயில்கள், 11 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 2 கோடியே 40 லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய செலவு, முதலீட்டு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், சிறிய அளவில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 215 கிலோ மீட்டர் துாரத்துக்கு மேல் செல்வோருக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சாதாரண வகுப்பில் 215 கிலோ மீட்டர் வரை பயணம் செய்வோருக்கு கட்டண உயர்வு இல்லை என்றும் அதற்கு மேல் பயணம் செய்தால், கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 216 கிலோ மீட்டர் முதல் 750 கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 751 கிலோ மீட்டர் முதல் ஆயிரத்து 250 கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரத்து 251 கிலோ மீட்டர் முதல் ஆயிரத்து 750 கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரத்து 751 கிலோ மீட்டருக்கு மேல் 20 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு, கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் புறநகர் மின்சார ரயில் கட்டணம், சீசன் கட்டணம், நடைமேடை கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண உயர்வால், ரயில்வேக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
















