வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாட்டுக்கு திரும்பிய நிலையில், கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
வங்கதேசத்திற்கு பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் தேசியவாத கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால், கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், நாட்டை விட்டு வெளியேறி,லண்டனில் வசித்து வந்தார். தற்போது அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 17 ஆண்டுக்குப் பின், வங்கதேசம் திரும்பினார்.
மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் லண்டனில் இருந்து வங்கதேசத்திற்கு விமானம் மூலம் டாக்கா வந்தடைந்தார். இந்நிலையில், நாட்டின் பல இடங்களில் இருந்து பேரணியாக வந்த கட்சித் தொண்டர்கள் அவருக்கு விமான நிலையத்தில், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து, அங்கிருந்து குண்டு துளைக்காத பேருந்தில் தாரிக் ரஹ்மான் அழைத்து செல்லப்பட்டார். அப்போது, சாலையின் இருபுறத்திலும் நின்ற கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து, டாக்காவின் பூர்பச்சல் பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 1971-ல் தமது முன்னோர்கள் சுதந்திரத்திற்காகப் போராடியதைப் போலவே, 2024-ல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கப் போராடியதாக குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற உரையை நினைவுபடுத்தும் வகையில், வங்கதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப தன்னிடம் ஒரு திட்டம் உள்ளதாக அவர் அறிவித்தார். மேலும், மதம், இனம் கடந்து அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதே தனது இலக்கு என்று அவர் உறுதியளித்தார்.
















