நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.
உலகில் எங்குப் போர் ஆரம்பித்தாலும் அதைத் தடுக்கிறேன் எனச் சொல்பவர் டிரம்ப். மத்தியக் கிழக்கு பதற்றம் தொடங்கிப் பல மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அவர் முயன்றுள்ளார்.
அப்படியிருக்கும்போது அமெரிக்காவே திடீரென இப்போது ஒரு நாட்டின் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
அதுதான் நைஜீரியா. நைஜீரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது.
அந்த மோசமான தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் இப்போது தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
அதன்படி வடமேற்கு நைஜீரியாவில் செயல்பட்டு வந்த ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துவிட்டதை அந்நாட்டின் அதிபர் போலா டினுபு கூட ஒப்புக்கொண்டுள்ளார். தீவிரவாதிகளை ஒழிக்கத் தனது அரசு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















