ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் இந்தியா, மூன்றாவது பெரிய ராணுவ சக்தியாக உருவெடுத்து வருகிறது. ஆயுத ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகிறது. இதுகுறித்து ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளை சல்லடை போட்டு சலித்து எடுத்த இந்தியாவின் உறுதிப்பாடும், சீனா, துருக்கி, பாகிஸ்தான் ஆயுதங்களை தவிடுபொடியாக்கிய ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையும் பாரதத்தை உலகம் உயர்த்திப் பிடிக்கக் காரணமாகியுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா உள்நாட்டு ஆயுத அமைப்புகளை பயன்படுத்தியதோடு, ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் சாதித்தது.
இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் சர்வதேச நாடுகளின் விருப்பத்தேர்வாக மாறியுள்ளன. பாரதத்தில் உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகள், ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவின் கொள்கைகளும், மேக் இன் இந்தியா முயற்சியும், உலகப் பாதுகாப்புச் சந்தையில் இந்தியாவை வளர்ந்து வரும் சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடியை எட்டியது. ஏற்றுமதி கிட்டத்தட்ட 12 சதவிகிதமாக அதிகரித்து 24 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.
65 சதவிகிதத்திற்கும் அதிகமான பாதுகாப்பு உபகரணங்கள் இப்போது உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால், நாடு, இறக்குமதி சார்புநிலையை பெருமளவில் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தி, போட்டித்தன்மையை மேம்படுத்தியுள்ளது. 2013-14ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 686 கோடியாக இருந்த நிலையில், தற்போது 35 மடங்கு அதிகரித்து 30 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது.
பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க, நாடு முழுவதும் பிரத்யேக உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் 91 ஆயிரத்து 450 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுடன் கூடிய பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரங்கள், 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும் மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் உலகளாவிய ராணுவ போக்கு, எதிர்கால போரில் ட்ரோன்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கண்காணிப்பு மற்றும் தன்னாட்சி அமைப்புகள், இந்தியா கவனம் செலுத்தும் பகுதிகளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன கப்பல்கள் மற்றும் ஆயுத தளங்களுடன் இந்திய கடற்படை இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பை விரிவுபடுத்த உள்ள அதே நேரத்தில், நவீன விமானங்கள் மற்றும் மேம்பட்ட ஆயுத அமைப்புகள் அவசியமாக மாறியிருக்கிறது.
ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான SU-57 அல்லது அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் சாத்தியமாகும் வாய்ப்பும் கனிந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபபடியாகப் பெரும்பாலான நாடுகளை முந்தி 3வது பெரிய ராணுவ சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா, 2029ம் ஆண்டுக்குள் ஆயுத ஏற்றுமதியை 50 ஆயிரம் கோடியாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது… எனவே 2026 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட் 20 முதல் 25 சதவிகித அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















