Kalashnikov, BrahMos மற்றும் பல மேம்பட்ட ஆயுதங்கள் உற்பத்தியின் காரணமாக உத்தரப்பிரதேசம் நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்புத் துறையின் மைய புள்ளியாக மாறியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
எப்போதும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மாநிலமாகப் பார்க்கப்படாத உத்தரப் பிரதேசம் ஆத்ம நிர்பர் பாரதம் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு உற்பத்தியில் நாட்டின் முதன்மையான மாநிலமாக மாறியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2021ம் ஆண்டு இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் திட்டங்களை உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் கொண்டு வந்தது. இதனடிப்படையில் உத்தரபிரதேச பாதுகாப்பு வழித்தடத்தில் ஆறு முனைகளையும், தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடத்தில் ஐந்து முனைகளையும் அமைக்கச் செயல் திட்டம் வகுத்துள்ளது.
உத்தரப் பிரதேச பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தை உத்தரப் பிரதேச விரைவுச் சாலைகள் தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தால் (UPEIDA) ஆக்ரா, அலிகார், சித்ரகூட், ஜான்சி, கான்பூர், லக்னோ ஆகிய ஆறு இடங்களை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறை தன்னிறைவை அடைவதே இதன் நோக்கமாகும். இதற்காக ஏற்கனவே 62 நிறுவனங்களுக்கு 977.54 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.
இந்த நிறுவனங்கள் மட்டும் 11,997.45 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. மேலும், சுமார் 14,256 நேரடி வேலைவாய்ப்புகளுக்கும் வழி வகுத்துள்ளன. இந்நிலையில், கூடுதலாக 110-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதன் மூலம் கிட்டத்தட்ட 23,000 கோடி ரூபாய் முதலீடுகளும், 38,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, லக்னோவில் உள்ள பிரம்மோஸ் விண்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 380 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தப் பிரம்மோஸ் வளாகம், முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி மற்றும் பரிசோதனை சரிபார்ப்பு நிலையமாகச் செயல்படுகிறது.
இங்கே ஆண்டுதோறும் 80 முதல் 100 சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்யப்படுகின்றன. 2027–28 நிதியாண்டில் 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை இது ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏவுகணை உற்பத்தி சார்ந்தது மட்டுமில்லை நாட்டின் உற்பத்தி திறனில் நம்பிக்கையைப் பற்றியது என்றும் நாட்டின் மையப்பகுதியில் சிக்கலான, உயர் துல்லிய பாதுகாப்பு உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பதற்கு இதுவே சான்றாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு பிரம்மோஸ் ஏவுகணையும் சரக்கு மற்றும் சேவை வரியில் சுமார் 8 கோடி ரூபாயை ஈட்டுகிறது என்றும், கடந்த அக்டோபரில், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உத்தரபிரதேச அரசுக்குச் சுமார் 40 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்தியுள்ளது என்றும், மாநில அரசின் நிதி மேம்பாட்டுக்குப் பாதுகாப்பு உற்பத்தி நேரடியாகப் பயன்படுகிறது என்றும் மாநில நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரமோஸ் போன்ற பாதுகாப்பு நிறுவனம் இருப்பதே உயர்நிலை பாதுகாப்பு உற்பத்திக்கான நம்பகமான இடமாக உத்தரபிரதேசம் உள்ளது என்பதைக் காட்டுவதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். உத்தரபிரதேசத்தில் மேம்பட்ட சட்டம் ஒழுங்கு, அதிகரித்து வரும் முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் அரசுக் கொள்கை ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இந்தப் பிரம்மோஸ் உற்பத்தி உள்ளது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து உற்பத்தி வளாகமும் உத்தரப்பிரதேசத்தில் தான் அமைந்துள்ளது. கான்பூரில் உள்ள அதானி டிஃபென்ஸ் வெடிமருந்து வளாகத்தில், ஏகே 203 துப்பாக்கிகளுடன் இணக்கமான 7.62 மிமீ ரவுண்டுகள் உட்பட தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், அமேதியில், கோர்வா ஆயுத தொழிற்சாலையில் இந்திய ஆயுதப் படைகளுக்கு AK 203 கலாஷ்னிகோவ் தாக்குதல் துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் இந்தோ ரஷ்ய ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட விரைவுச்சாலைகள், தளவாட நெட்வொர்க்குகள் மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பு அமைந்துள்ள உத்தரபிரதேசத்தின் இந்த வளர்ச்சி, பழமையான கடலோர சார்புகளைத் தவிர்த்துச் சாலைகள் வழியாக ஆயுதங்களை நகர்த்துவதற்கு உதவுகின்றன. ஒரு மாநிலத்துக்குள் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஏவுகணைகள், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் ஒரு தனித்துவமான, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது.
















