சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த நபரின் அலுவலகத்தில், கேரள சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில், துவார பாலகர்கள் சிலை மீது பதிக்கப்பட்டிருந்த 4 கிலோ தங்க தகடுகள் மாயமானது குறித்து, கேரள சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் இடைத்தரகர் உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முன்னாள் தேவசம் வாரிய நிர்வாக அதிகாரி எஸ்.சிவகுமாரை கைது செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அப்போது, கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த நகை வியாபாரியிடம் 400 கிராம் தங்கத்தை கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இதன்பேரில் அங்கு சென்ற SIT போலீசார், தங்க வியாபாரி கோவர்தன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திண்டுக்கல் ராம்நகர் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் பாலசுப்பிரமணியன் அலுவலகத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
















