கோவை நீலாம்பூர்–மதுக்கரை பைபாஸ் சாலை, 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ரூ.1,800 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலைதுறை திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் என்னென்ன பயன்கள் கோவை மாவட்டத்திற்கு கிடைக்கும் என்பதை இந்தச் செய்தி தொகுப்பில் காணலாம்.
தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” என்று அழைக்கப்படும் கோவை மாநகரம், இந்தியாவின் மிக வேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐ.டி.நிறுவனங்கள் அதிகரித்து வருவதன் காரணமாகக் கோவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, 26 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட நீலாம்பூர் – மதுக்கரை இடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சந்திப்புச் சாலைகள் குறுக்கிடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை தவிர்க்கும் வகையில், நீலாம்பூர் – மதுக்கரை இருவழி சாலையை, 6 வழிச்சாலையாக மாற்ற 1800 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. இதற்குப் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், தற்போதுள்ள 10.5 மீட்டர் அகல சாலை, எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு 45 மீட்டர் வரை அகலப்படுத்தப்படும். சாலையின் குறுக்கே உள்ள இருகூர் மற்றும் செட்டிபாளையம் கீழ்மட்ட ரயில்வே பாலங்கள் அகலப்படுத்தப்படும்.
சிந்தாமணிபுதூர் சந்திப்பு, பொள்ளாச்சி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்களும், 13 இடங்களில் கீழ்மட்ட சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் எந்த குறுக்கீடும் இன்றி வாகனங்கள் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும்.
இதற்காக 49 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக டெண்டர் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை வளர்ந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த வளர்ச்சி திட்டமானது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
















