ரஷ்யாவில் பணியாற்றச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? இதன் சாதக, பாதகம் என்ன? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. நாட்டு மக்கள் பலரும் ராணுவ பணிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதால், அந்நாட்டின் பிற துறைகளில் தொடர்ச்சியாக ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும். முதியவர்களின் எண்ணிக்கை உயர்வு, குழந்தைகளின் பிறப்பு விகிதம் சரிவு உள்ளிட்டவையும் இந்த ஆள் பற்றாக்குறைக்கு காரணங்களாக உள்ளன. இந்த பிரச்னையை சரிசெய்ய மற்ற நாட்டு பணியாளர்களை ரஷ்ய அரசு அதிகளவில் வேலைக்கு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அண்மையில் இந்தியாவுக்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புதின் 16 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதில், தொழிலாளர் இயக்க ஒப்பந்தமும் ஒன்று. இந்த ஒப்பந்தம் ரஷ்யாவில் நிலவும் ஆள்பற்றாக்குறையை போக்கும் வகையில், அந்நாட்டின் ஐடி, கட்டுமானம், சுகாதாரம் போன்ற துறைகளில் இந்திய பணியாளர்களை ஈடுபடுத்த வழிவகை செய்கிறது. 2023ம் ஆண்டு முதலே ரஷ்யாவிற்கு வேலைக்காகச் செல்லும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்தாண்டு சுமார் 10,000 இந்தியர்கள் வேலைவாய்ப்புக்காக ரஷ்யாவுக்கு சென்றனர். இந்த எண்ணிக்கை அதன் முந்தைய ஆண்டை விட 4 மடங்கு அதிகம். 2024ம் ஆண்டில் ரஷ்யா சென்ற இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரமாக உயர்ந்தது. இந்தாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 27 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய பணியாளர்கள் ரஷ்யாவிற்கு பயணித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் முடிவில் அந்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனைத்து பணியாளர்களும், கட்டுமானம், உற்பத்தி, விவசாயம், சேவை துறை சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரும்பாலும் உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளும், குறைந்த திறன் தேவைப்படும் வேலைகளும்தான் இந்திய பணியாளர்களுக்கு அதிகம் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது ஐ.டி போன்ற முக்கிய துறைகளிலும் இந்திய பணியாளர்களை ஈடுபடுத்த அந்நாட்டின் தொழில்நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தப் பணியாளர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் ஊதியத்தை காட்டிலும் அதிகமான ஊதியம் வழங்கப்படுகிறது. அத்துடன், இந்திய தொழிலாளர்கள் அதிகளவில் பணிக்காகச் செல்லும் சில நாடுகளுடன் ஒப்பிடுகையில், ரஷ்யாவில் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் எளிமையாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவுடனான வர்த்தம் 2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர்களை எட்ட வேண்டும் என இலக்கை ரஷ்யா கொண்டுள்ளது.
இந்த இலக்கை எட்ட, இந்திய பணியாளர்களின் இந்தப் பணியமர்த்தல் முக்கிய பங்கு வகிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதே சமயம், ரஷ்யா நடத்தி வரும் போரில் இந்தியர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா என்ற கேள்வியும் இந்த இடத்தில் எழலாம். ரஷ்ய படைகளில் இதுவரை 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாகவும், அவர்களில் 119 பேர் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியதாகவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அண்மையில் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீனும், இடம்பெயர்வு குறித்த ஆய்வாளருமான அமர்ஜிவா லோச்சன், ரஷ்யாவில் உள்ள இந்தியர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படுவதில்லை என தெரிவித்தார். ராணுவ பணிகளுக்கு இந்தியர்கள் முதன்மை தேர்வாக இருக்க மாட்டார்கள் எனவும், தாய்லாந்து, மியான்மர் போன்ற நாட்டினர்தான் ரஷ்யாவின் தேர்வாக இருப்பார்கள் எனவும் கூறினார். இதனால், ரஷ்ய போரில் இந்தியர்கள் ஈடுபடுத்தப்படுவார்களோ என்ற அச்சம் தேவையில்லை என விளக்கம் அளிக்கப்படுகிறது.
















