வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் பொறியாளர்கள், மருத்துவர்கள் தாயகம் திரும்பி வருவதாக அந்நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் கூறிய நிலையில், பொருளாதார நெருக்கடியால் கடந்த 24 மாதங்களில் மட்டும் சுமார் 5,000 மருத்துவர்கள், 11,000 பொறியாளர்கள் நாட்டை விட்டுவெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பெரும் கடன், கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களால் தவித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே மைக்ரோ சாஃப்ட் உள்ளிட்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட ஏராளமான நிறுவனங்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி உள்ளன. நான்காவது பெரிய ஃப்ரீலான்சிங் மையமாக உள்ள பாகிஸ்தானில் இன்டர்நெட் வசதி முறையாக இல்லாததால் 1.62 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சுமார் 2.37 மில்லியன் ஃப்ரீலான்சிங் வேலைகள் ஆபத்தில் உள்ளன என்றும் பாகிஸ்தானின் முன்னாள் செனட்டர் முஸ்தபா நவாஸ் கோக்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், Pakistan’s Bureau of Emigration and Overseas Employment வெளியிட்டுள்ள அறிக்கையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ம் ஆண்டில் 7 லட்சத்து 27,381 பாகிஸ்தான் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ள நிலையில், கடந்த 11 மாதங்களில் சுமார் 6 லட்சத்து 87,246 பாகிஸ்தான் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டில் வந்து பிச்சை எடுக்கிறார்கள் என்று சவூதி அரேபியா உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் பிச்சை எடுத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக வளைகுடா நாடுகள் மற்றும் பிற நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். ‘தொழில்முறை பிச்சைக்காரர்கள்’ மற்றும் ஆவணங்கள் முழுமையற்ற பயணிகளை வெளிநாடு செல்வதற்குத் தடை விதிப்பதாக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி அறிவித்திருந்தார் இந்தச் சுழலில் டாக்டர்கள் உட்பட படித்த பட்டதாரிகளும் பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டில் வேலை தேடத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக 2011 மற்றும் 2024-க்கு இடைபட்ட காலத்தில்,செவிலியர்களின் புலம்பெயர்வு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு 2,144 சதவீதம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் நல்ல பதவிகளில் உள்ள திறமையானவர்களின் புலம்பெயர்வைத் தடுக்கும் விதமாக , பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. இந்த ஆண்டில் பாகிஸ்தான் விமான நிலையங்களிலிருந்து சுமார் 66,154 பேர் பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்காகும். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள டம்பா நகரில் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானிய புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் அசிம் முனீர், வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் கண்ணியத்துக்கும் பெருமைக்கும் பேர் பெற்றவர்கள் என்றும், பாகிஸ்தானில் உள்ளவர்களைப் போலவே உணர்ச்சிவசப்பட்டு தாய் நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், “வெளிநாட்டு பாகிஸ்தானியர்கள் “மூளை வடிகால்” அல்ல, மாறாக “மூளை ஆதாயம்” கொண்டவர்கள் என்றும் பாராட்டி இருந்தார். உள்நாட்டில் ஒன்றும் இல்லை என்று அதிகமான பாகிஸ்தானியர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் நிலையில், அசிம் முனீரின் வார்த்தைகளை வைத்தே அவரை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். அந்த மனநோயாளி சொல்வது போல , இது ஒரு மூளை ஆதாயம்,” என்று ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், ‘மூளை ஆதாயம்’ என்று அழைக்கிறார்.
இந்த மனிதர்களின் அறியாமை நாட்டுக்கு ஒரு கடுமையான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு உள்ளதாகவும், எதுவும் நடக்காதது போல அவர்கள் மட்டும் பெருமையுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். எந்தவொரு படித்த அல்லது திறமையான நபரும் ஒரு “கடுமையான” நாட்டில் வாழவோ அல்லது அங்கேயே இருக்கவோ விரும்ப மாட்டார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள இன்னொருவர், வெறும் கருத்து வேறுபாடு அல்லது வரி செலுத்துவோர் பணத்தில் வாழ்பவர்களை விமர்சனம் செய்ததற்காக நாடு கடத்தப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம் மற்றும் கொல்லப்படலாம் என்றும் அசிம் முனீருக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுகள் எல்லாம் பாகிஸ்தானின் உண்மை நிலவரத்தைப் படம் பிடித்து காட்டியுள்ளது. பாகிஸ்தானில் திறமையான நிபுணர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அசிம் முனீர் போன்ற தகுதியற்ற தலைவர்களின் பேச்சுக்கள் பாகிஸ்தானின் உண்மையான நெருக்கடி நிலைக்கு நேர் மாறாக உள்ளது.
















