கிடப்பில் போடப்பட்ட தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் நடைபெற்ற அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆடுதுறையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டு திடீரென மூடப்பட்டது. இதனால் சிறுகச் சிறுக பணம் சேர்த்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
மேலும், பொதுமக்கள் அங்கு 300 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த மக்கள், பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிடப்பில் உள்ள இந்த வழக்கை விரைந்து நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய மக்கள், தவறினால் பாதிக்கப்பட்ட மூன்றாயிரம் குடும்பங்கள் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வோம் என எச்சரித்துள்ளனர்.
















