உத்தரப்பிரதேசத்தில் வெறிநாய் கடித்து பலியான எருமையின் பாலால் தயாரிக்கப்பட்ட ரைத்தாவை சாப்பிட்ட கிராம மக்கள் தடுப்பூசிக்காக மருத்துவமனையில் குவிந்தனர்.
கடந்த டிசம்பர் 23ம் தேதி பதாவூன் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருந்தில், கிராம மக்களுக்கு எருமை மாட்டு பாலில் தயாரிக்கப்பட்ட ரைத்தா பரிமாறப்பட்டது. இதனை ஏராளமான மக்கள் சாப்பிட்டனர்.
இதனிடையே ரைத்தாவுக்கு பயன்படுத்தப்பட்ட பாலை கறந்த எருமை மாடு, தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி உயிரிழந்ததாகத் தகவல் பரவியது.
இதனால் பீதியடைந்த கிராம மக்கள் தடுப்பூசி கேட்டு அங்குள்ள சுகாதார மையத்தில் குவிந்தனர். வெறிநாய்க்கடி தடுப்பூசி கேட்டு ஒரே சமயத்தில் ஏராளமானோர் குவிந்ததால் மருத்துவர்களும், நர்சுகளும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதையடுத்து கிராமத்திற்கு விரைந்த சுகாதாரத் துறையினர், மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி தடுப்பூசிகளை செலுத்தினர்.
காய்ச்சிய பால் மூலம் நோய் பரவுவது சாத்தியமில்லாத ஒன்று எனக் கூறியுள்ள சுகாதாரத்துறையினர், இதுவரை கிராமத்தில் நோய் எதுவும் பதிவாகவில்லை எனக் கூறியுள்ளனர்.
















