அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருப்பதாக குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30வது ஆண்டு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. 2021 முதல் 2024 வரை நான்கு ஆண்டுகளுக்கான பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணை தலைவரும், பல்கலைக்கழக வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் மொத்தம் 73 ஆயிரத்து 527 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து விழாவில் பேசிய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 2047ல் இந்தியா தன்னிறைவு அடைந்த நாடாக மாறுவதற்கு மாணவர்களின் பங்களிப்பு அவசியம் எனவும் புதிய கல்விக் கொள்கை 2020ன் மூலம் இந்தியாவின் இளைஞர்களின் சவால்களையும், முன்னேற்றங்களையும் ஒருங்கிணைப்பது தான் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டம் என்றும் கூறினார்.
தரமான கல்வியை புனித தன்மையோடு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் பிரதமரின் கனவு என்றும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் கல்விக் கொள்கையின் நோக்கமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
















