வங்கதேசத்தில் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்ட வழக்கை 24 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என அந்நாட்டின் மாணவர் அமைப்பு கெடு விதித்துள்ளது. அத்துடன், இந்தியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. படுகொலையில் இந்தியர்கள் யாரும் சம்மந்தப்படாத நிலையில், இரு நாட்டு உறவை பாதிக்கும் வகையிலான இந்த கோரிக்கைகள் குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
கடந்தாண்டு வங்கதேசத்தில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. அதில், இன்குலாப் மஞ்ச் (Inqilab Mancha) என்ற அமைப்பு முன்னிலை வகித்தது. அதன் ஒருங்கிணைப்பாளரான ஷெரீஃப் உஸ்மான் ஹாடி என்பவர் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒன்றிணைத்து கடுமையான போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் விளைவாக, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில், வங்கதேசத்தில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி, கடந்த 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு மறுநாள் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி, பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது மர்மநபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் சிகிச்சை பலன்றி கடந்த 18ம் தேதி உஸ்மான் ஹாடி உயிரிழந்தார்.
இந்த படுகொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார், கொலையில் தொடர்புடைய நபர்கள் இந்தியாவிற்கு தப்பி சென்றதாக தெரிவித்தனர். உஸ்மான் ஹாடியின் கொலையில் 2 நபர்கள் சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்கள் இருவரும் மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள ஹலுகாட் எல்லை வழியாக இந்தியாவின் மேகாலயா மாநிலத்திற்குள் நுழைந்ததாகவும் விளக்கம் அளித்தனர். பின்னர், டாக்ஸி மூலம் இருவரும் துரா என்ற நகருக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.
ஆனால், வங்கதேச காவல்துறையின் இந்த குற்றச்சாட்டை மேகாலய காவல்துறையும், இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படையும் திட்டவட்டமாக மறுத்துள்ளன. மேலும், இந்த குற்றச்சாட்டு தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட கதை எனவும் தெரிவித்துள்ளன.
இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க இன்குலாப் மஞ்ச் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்தியர்களின் பணி அனுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் எனவும், ஷேக் ஹசீனாவை
திருப்பி அனுப்ப மறுத்தால், இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் எனவும் அந்த அமைப்பு தற்போது கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், முகமது யூனுஸ் தலைமையிலான அரசு ஹாடியின் படுகொலை குறித்த அனைத்து விசாரணைகளையும், இன்னும் 24 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் இன்குலாப் மஞ்ச் அமைப்பு கெடு விதித்துள்ளது.
இதனிடையே, இந்த அமைப்பு சார்பில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், அந்நாட்டில் உள்ள இந்துக்கள் மீதான வன்முறையும் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இது குறித்த அண்மையில் கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,900க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை சுட்டி காட்டினார்.
வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்க வேண்டியது இடைக்கால அரசின் பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தினார். அதேபோல, வங்கதேசத்தில் நிகழும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், ஹாடியின் கொலை சம்பவத்தில் தொடர்ந்து இந்தியாவை குற்றம்சாட்டி வரும் மாணவர் அமைப்பின் போக்கு, இந்தியா – வங்கதேச உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.
















