காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளதாக உடற்பயிற்சி ஆசிரியர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராயப்பேட்டையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர் தமிழக காவல்துறை அகாடமியில் பல ஆண்டுகளாக உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 28ஆம் தேதி தி.நகர் அருகே நடந்த ஈவ்-டீசிங் தகராறில் அவரது நண்பர் பாபுராவ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தன்னை A2 குற்றவாளியாகக் காவல்துறை அதிகாரிகள் சேர்த்துள்ளதாகக் கூறி சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக நுழைவாயில் முன்பு நள்ளிரவில் சிவசுப்பிரமணியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
காவல் அதிகாரிகள் இழிவாகப் பேசியதாகவும், பொய் வழக்கு காரணமாகத் தன்னை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
தன்னை பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சிவசுப்பிரமணியத்தை காரில் ஏற்றி அழைத்துச் சென்று வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















