திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 5, 6வது மண்டலங்களில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தூய்மை பணியை தனியார் மையமாக்குவதை கைவிட வலியுறுத்தியும் கடந்த ஐந்து மாதங்களாகப் போராடி வருகின்றனர்.
சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், கடலில் இறங்கி போராட்டம் எனப் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று, காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம், ஓமந்தூரார் மருத்துவமனை, ரிப்பன் மாளிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
















