சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் சிகிச்சை பிரிவில் உலா வரும் எலிகள், பொருட்கள் மற்றும் நோயாளிகளைக் கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 10 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
மருத்துவமனையின் வளாகத்தில் நாய் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், தற்போது நோயாளிகளின் வார்டுகளில் எலித் தொல்லை அதிகரித்துள்ளது.
குறிப்பாகப் பெண்கள் மகப்பேறு பிரிவு, பெண்கள் பொதுப்பிரிவு, விபத்துப் பிரிவு, பச்சிள குழந்தைகள் பிரிவுகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் எலிகள் உலா வருவதாக நோயாளிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அதிகாலை 5.30 மணிக்குப் பெண்கள் சிகிச்சை பிரிவில் உலா வரும் எலிகளின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















