நிதி நெருக்கடியில் சிக்கித் திணறும் சென்னை பல்கலைக் கழகத்தின் மூலதன நிதி 346 கோடி ரூபாயில் இருந்து 176 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தரை நியமிப்பது முதல், நிதி பெறுவது வரை அனைத்து விஷயங்களிலும், மத்திய அரசுடன் மாநில அரசு தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல், மாநில பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி திட்டங்கள் பெரிய அளவில் இல்லாததால் பல்கலைக் கழக மானியக்குழு நிதியில், 80 சதவீதத்துக்கும் மேல் கிடைக்கவில்லை என தெரிகிறது.
பிஎச்.டி., பெறுவோரின் தகுதி குறைந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், யுஜிசியின் புதிய விதிகளைக் கடைபிடிப்பதா, கைவிடுவதா எனத் தெரியாமல் ஆட்சி மன்ற குழுவினர் குழம்பினர்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஆட்சி மன்ற குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு சென்னை பல்கலைக் கழகத்தின் மூலதன நிதியில் இருந்து 176 கோடி ரூபாயை அரசு எடுத்துள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூல தனத்தை எடுத்துச் செலவு செய்ததன் காரணமாகப் பல்கலைக் கழகத்தின் மூலதன நிதி 346 கோடி ரூபாயில் இருந்து 176 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
மேலும், ஆட்சி மன்ற குழுவின் இத்தகைய போக்கு, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தைப் போன்று சென்னை பல்கலை கழகத்தையும் முடமாக்கும் செயல் எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















