திருத்தணியில் இளைஞர் சூரஜ் சரமாரியாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமெனப் பாஜக செய்தித் தொடர்பாளர் ANS பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், திருத்தணியில் இளைஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சமூகத்தில் இளைஞர்களின் குற்றச்செயல்கள், போதைப்பொருள் பழக்கம் மற்றும் வன்முறையைப் போற்றும் போக்கை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
வழக்கில் கைதான 4 சிறுவர்களில் 3 பேர் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், ஒருவர் பெற்றோர் பொறுப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு இந்த விவகாரத்தில் அவசியம் எனக் கூறியுள்ளார்.
காவல்துறை நடவடிக்கை, மருத்துவமனை சிகிச்சை, பாதிக்கப்பட்டவருக்கான ஆதரவு ஆகியவற்றில் மனித உரிமை மீறல்கள் உள்ளதா எனச் சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ள பிரசாத்,
இந்தச் சம்பவத்தைத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
















