உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டியது இந்தாண்டின் மிகவும் மோசமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் இனியும் அலட்சியம் காட்டினால், எதிர் வரும் ஆண்டுகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நோக்கில் 2015ம் ஆண்டு பாரீசில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில், பூமியின் வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸூக்கும் கீழ் வைப்பதென்றும், முடிந்தால், 1.5 டிகிரி செல்சியஸூக்கு கீழ் கட்டுப்படுத்த முயற்சி எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. 1.5 டிகிரி செல்சியஸ்-க்குள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த தவறிவிட்டால் இயற்கை பேரழிவுகளும், மனித உயிரிழப்புகளும் அதிகரிக்கும் எனவும் அப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த எச்சரிக்கையை ஏற்றுக்கொண்ட 194 நாடுகள் பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், அவற்றில் பெரும்பாலான நாடுகள் இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தவில்லை. அதன் விளைவாக இந்தாண்டு உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை கடந்துவிட்டது. இதன் காரணமாக, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கலிபோர்னியா உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. பிரேசில் போன்ற நாடுகளில் கடும் வறட்சி நிலவியது.
இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளை புரட்டி போடும் அளவுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல, ஸ்வீடன், பின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத அளவில் கடும் வெப்பம் நிலவியது. குறிப்பாக, துருக்கியில் அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது.
இவை மட்டுமல்ல, இதே போன்று மிக மோசமான 157 வானிலை நிகழ்வுகள் இந்தாண்டு ஏற்பட்டதாக World Weather Attribution அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், 100க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும், சில இடங்களில் அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த World Weather Attribution அமைப்பின் இணை நிறுவனரான Friederike Otto, கச்சா எண்ணெய், நிலக்கரி போன்றவற்றை நாம் அதிகளவில் எடுப்பதை உடனடியாக நிறுத்தாவிட்டால், பூமியின் வெப்பஅளவை குறைக்க முடியாமலேயே போய்விடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தாண்டு வீசிய வெப்பஅலைகளின் தாக்கம் கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகம் இருந்ததையும் அவர் சுட்டி காட்டியுள்ளார். இவற்றிற்கு முழுக்க முழுக்க மனித குலத்தின் அலட்சியமான நடவடிக்கைகள்தான் காரணம் எனவும் Friederike Otto குற்றம்சாட்டியுள்ளார். சீன அரசு ஒருபுறம் புதுப்பிக்கதக்க எரிவாயு திட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே, மறுபுறம் நிலக்கரி தொடர்பான தொழில்களில் அதிக முதலீடுகளை செய்து வருகிறது.
அதேபோல், அமெரிக்க அதிபர் ட்ரம்பும், நிலக்கரி, கச்சா எண்ணெய் மீதான பொருளாதாரத்திற்கு அதிக ஆதரவு அளித்து வருகிறார். பல ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடுகளும் இதே போல்தான் உள்ளன. உலக நாடுகளின் இத்தகைய போக்குகள், பூமியின் வெப்பநிலையைக் குறைப்பதற்கான நடவடிக்கை தோல்வியடைந்ததையே உணர்த்துவதாக ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் பூமியின் வெப்பநிலை மேலும் அதிகரித்து, கற்பனை செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















