நைஜீரியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி பிரிட்டன் குத்துச்சண்டை வீரர் ஆண்டனி ஜோஷ்வா காயமடைந்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளன.
பிரிட்டனைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான ஆண்டனி ஜோஷ்வா, நைஜீரிய-பிரிட்டன் பாரம்பரியம் கொண்டவர்.
இவர் நைஜீரியாவில் தனது நண்பர்களுடன் சொகுசு காரில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார் சாலை விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் ஜோஷ்வா மற்றும் கார் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அவருடன் பயணித்த நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
13 மாத இடைவெளிக்குப் பின் குத்துச் சண்டை போட்டிகளுக்குத் திரும்பிய ஜோஷ்வா, சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் மற்றொரு குத்துச்சண்டை வீரரான ஜேக் பாலை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியில் அவர் டைசன் ஃபியூரியுடன் போட்டியிட உள்ளார்.
இந்த நிலையில் ஜோஷ்வா விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















