ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லம், உக்ரைனிய ட்ரோன்களுக்கு இலக்காகி இருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தத் தருணத்தில் ரஷ்ய அதிபர் தங்கியிருக்கும் வீடுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை பற்றித் தற்போது பார்க்கலாம்.
ரஷ்யா – உக்ரைன் போருக்கு முடிவுரை எழுத, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில்தான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வீடு உக்ரைனிய ட்ரோன்களுக்கு இலக்காகியிருப்பது சர்வதேச நாடுகளின் கவனம் பெற்றுள்ளது. வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் ரஷ்ய அதிபர் புதின் தங்கக்கூடிய வால்டாய் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம்சாட்டியிருந்தார்.
சேதம் ஏற்படுவதற்கு முன்னர் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் ரஷ்யாவின் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது அடிப்படை ஆதாரமற்றது என்றும், அரசியல் ரீதியாகப் பழிபோடும் நடவடிக்கை என்றும் விமர்சித்தார், மேலும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதற்காக ரஷ்யா போடும் நாடகம் என்றும் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியிருந்தார்.
ட்ரோன் தாக்குதல் சம்பவம் இருநாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் சறுக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கவலை தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு பற்றிய கவலைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு மீது வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.
அதே நேரத்தில் ரஷ்ய அதிபர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் வெறுமனே தாக்குதல்களுக்கு உள்ளாகக் கூடியவை அல்ல என்பதும், அது அதிநவீன போர் வசதிகளுடன் கூடிய ராணுவ கோட்டை என்பதும் தெரியவந்துள்ளது… மேலும் மாஸ்கோவில் உள்ள அதிபரின் கிரெம்ளின் மாளிகை, நோவோ-ஒகாரியோவோவில் உள்ள அதிபரின் புறநகர் இல்லம், தற்போது உக்ரைன் தாக்குதலுக்கு இலக்கான நோவ்கோரோட் பகுதியில் உள்ள வால்டாய் எஸ்டேட் போன்ற அதிகாரப்பூர்வ இல்லங்கள் மீது பார்வையை திருப்பியுள்ளன.
மத்திய மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளின், அரசின் இதயமாக உள்ளது. இங்கு அதி முக்கிய நிகழ்வுகள் நடந்தாலும், அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே புதின் இங்குத் தங்குவார் என்று கூறப்படுகிறது. மாஸ்கோவின் மேற்கே ஒடின்ட்சோவ்ஸ்கியில் உள்ள நோவோ-ஒகாரியோவோ என்பது ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ புறநகர் இல்லமாகக் கருதப்படுகிறது. இது புதினின் தினசரி நிர்வாகத்திற்கான முதன்மை தளமாகப் பார்க்கப்படுகிறது.
நோவ்கோரோட்டில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த வால்டாய் அரண்மனை, ரஷ்ய அதிபரின் இல்லங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பும், செயற்கைக்கோளின் சிமிட்டாத கண்களும் வால்டாய் அரண்மனையைப் பாதுகாப்பை கச்சிதமாகக் கவனித்து வருகின்றன. இதுமட்டுமின்றி கிராஸ்னோடர் மாவட்டத்தில் கருங்கடலை ஒட்டிச் சோச்சியில் உள்ள போச்சரோவ் ருச்சே இல்லம், அதிபரின் கோடைகால இல்லமாக அறியப்படுகிறது. ஓய்வு மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் இடம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆடம்பர கருங்கடலில் எஸ்டேட் என்று கூறப்படும் கெலென்ட்ஜ் அரண்மனை, புடினின் அரண்மனை என்றே குறிப்பிடப்படுகிறது. இங்கு அரண்மனை வளாகம், மருத்துவ வசதிகள், ஹெலிபேடுகள், நிலத்திற்குள் ஆழமான உட்கட்டமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி புதினின் பாதுகாப்புக்காக ரகசிய பதுங்குக் குழிகள் ரஷ்யா முழுவதும் உள்ளதாகவும், காடுகள், நீர் நிலைகள் போன்றவற்றிற்கு அருகே சுரங்கப்பாதைகள் அமைந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
நோவோ-ஓகாரியோவோ, வால்டாய் மற்றும் போச்சரோவ் ருச்சே ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாதுகாப்பான அலுவலக அமைப்புகளை கொண்டதாக இருப்பதாகவும், இது ரஷ்ய அதிபரின் உண்மையான இருப்பிடத்தை மறைத்து செயல்பாட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
















