ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியில் கோயிலில் பக்தர்கள் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, நள்ளிரவு கடலில் புனித நீராடிய பக்தர்கள் வழிபாடு செய்ய வரிசையில் காத்திருந்தனர். பொது தரிசன வரிசையில் சுமார் 6 மணி நேரமும், 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்து வெற்றிவேல், வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்ததால் திருசெந்தூர் நகரமே திருவிழாக்காலம் போல் காட்சியளிக்கிறது.
இதேபோல் சென்னை வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனை தொடர்ந்து, கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் வேண்டுதல்களை முன்வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு சக்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதை காண கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் தீர்த்த குடங்கள் எடுத்தும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
















