வங்கதேச முன்னாள் மற்றும் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ள சூழலில் ஜெய்சங்கரின் வங்கதேச பயணம் இந்தியாவின் ராஜதந்திர நகர்வாக பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இதயம் மற்றும் நுரையீரல் தொற்றுநோய்க்குச் சிகிச்சை எடுத்துவந்த வங்கதேசத்தின் முன்னாள் மற்றும் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா தனது 80வது வயதில் கடந்த செவ்வாய் கிழமை டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
1991 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டு என இரு முறை வங்கதேசத்தின் பிரதமராக இருந்த வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவரான கலீதா ஜியாவின் மறைவுக்கு 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கும் அந்நாட்டு இடைக்கால அரசு, அவரது ஜனாஸா தொழுகை நடைபெறும் நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அவரின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அதிலிருந்தே, வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான அரசியல் சூழல் ஏற்பட்டது.
முகமது யூனுஸின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவுக்கு எதிராக இருப்பதால் இருநாட்டு உறவிலும் விரிசல் விழுந்துள்ளது.
இந்தச் சூழலில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் வங்கதேச பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதாவது, விலகி இருப்பதை விட, இணைந்து செயல்படவே இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்ற இராஜதந்திர நகர்வாகவே ஜெய்சங்கரின் பயணம் பார்க்கப்படுகிறது.
நிச்சயமற்ற அரசியல் சூழல்களில் சிக்கிக் கொள்ளாமல், நீண்ட கால தேசிய நலன்களில் இருதரப்பு உறவுகள் வேரூன்றியுள்ளன என்பதையும் ஜெய்சங்கரின் பயணம் குறிக்கிறது.
இதன் மூலம் இக்கட்டான தருணத்தில்,வங்கதேச மக்களுக்கும் அவர்களின் ஜனநாயகத்துக்கும் உரிய மரியாதையை இந்தியா செலுத்தியுள்ளது வெளிப்படுகிறது.
வங்கதேசத்தில் உள்நாட்டுக் குழப்பத்தில் வெளிநாட்டு அந்நிய சக்திகள் மீன் பிடிப்பதற்குத் தயாராகிவரும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவர் அல்லது கட்சியின் நண்பராக இல்லாமல், இந்தியா தன்னை வங்கதேசத்தின் நண்பர் என்பதை நிரூபித்துள்ளது.
வங்கதேசத்தில் ஆட்சியில் இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்ட, முற்போக்கான மற்றும் பயங்கரவாதமற்ற ஜனநாயக சக்திகளையே இந்தியா ஆதரிக்கும் என்ற ஒரே செய்தியை இந்த கலீதா ஜியாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதன் மூலம் மௌனமாக கூறியுள்ளது. அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் எப்படி இருந்தாலும், இருதரப்பு உறவுகளைப் பாதுகாக்கும் இந்தியாவின் நம்பகத் தன்மையை ஜெய்சங்கரின் வங்கதேச பயணம் குறிக்கிறது.
















