ஜப்பானை பின்னுக்குள் தள்ளி உலகின் 4வது பொருளாதார நாடாக முன்னேறிய இந்தியா, 2030ம் ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அதற்கான வளர்ச்சி எப்படி சாத்தியம் என்பதை தற்போது பார்க்கலாம்…
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக முதலிடத்தில் நீடிக்கிறது. சீனா இரண்டாவது இடத்திலும், ஜெர்மனி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த சூழலில்தான் உலகின் நான்காவது பொருளாதார நாடாக உருவெடுத்த இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளியுள்ளது.
உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும் 2025-26ம் நிதியாண்டின் 2ம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆறு காலாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியது. இதே சீரான வளர்ச்சியில் சென்றால், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை இந்தியா முந்த வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்…
அதே நேரத்தில் ஜெர்மனியை முந்த இந்தியா என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுவது வாடிக்கையானதுதான்…. அதற்கு முன்னதாக இந்தியாவின் எழுச்சி ஜப்பானை பின்னுக்குள் தள்ள பலவிதமான காரணங்கள் உள்ளன.. வயதான மக்கள்தொகை, பலவீனமான உள்நாட்டுத்தேவை, நீண்ட கால பணவாட்ட அழுத்தங்கள் காரணமாக ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருந்தது.
இந்த சூழலில்தான் வலுவான, இளமையான மக்கள்தொகை, விரிவடைந்து வரும் உள்நாட்டு சந்தைகள் இந்தியாவுக்கான வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின. நாட்டிலுள்ள இளம் பணியாளர்கள், அதிகரித்து வரும் நகரமயமாக்கல், உற்பத்தித் திறன் மேம்பாடு போன்ற காரணிகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளித்ததோடு, உந்துசக்தியாகவும் விளங்கின.
இதன் காரணமாக 2025-26 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.2 சதவிகிதமாக உயர்ந்து நின்றது.
தொடர்ச்சியான உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் தொல்லை தந்தாலும், இந்தியாவின் வளர்ச்சி வேகத்தில் எந்தவொரு தடைகளையும் ஏற்படுத்த முடியவில்லை.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு, நிலையான பணவீக்கம் முக்கிய பங்கு வகித்தாலும், சிறப்பான நிதி நிலைமை, வணிகங்களுக்கு தடையில்லாமல் கடன் ஓட்டத்தை உறுதி செய்திருந்தன. இந்த காரணிகள் அனைத்தும் பொருளாதார வளர்ச்சி வேகத்தை முடுக்கிவிட, ஜப்பானை இந்தியா முந்திச்செல்ல வழிவகுத்தது.
இந்தியாவின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் உயர் வளர்ச்சியையும், குறைந்த பணவீக்கத்தையும் கோடிட்டு காட்டுகின்றன. இது நுகர்வோர் வாங்கும் சக்தியை அதிகரிக்கிறது.
இந்த நிலைமை தொடரும் நிலையில், ரிசர்வ் வங்கி 2025-26 நிதியாண்டிற்கான வளர்ச்சி கணிப்பை 7.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இதுமட்டுமன்றி வளர்ச்சியுடன் இணைந்து வேலைவாய்ப்பும் மேம்பட்டுள்ளது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் வேலையின்மை 2025 நவம்பரில் 4.8 சதவிகிதமாக குறைந்துள்ளது.
தற்போது இந்தியாவின் இலக்கு, மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியின் மீது திரும்பியுள்ளது. ஜெர்மனியின் உள்நாட்டு உற்பத்தி 2025ம் ஆண்டில் 5.01 டிரில்லியன் டாலராகவும், 2026 ஆம் ஆண்டில் 5.33 டிரில்லியன் டாலராகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, இந்தியா 2030 ஆம் ஆண்டில் தோராயமாக 7.3 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, தற்போதைய நிலைமை தொடர்ந்தால் அடுத்த 2.5 முதல் 3 ஆண்டுகளுக்குள் ஜெர்மனியை முந்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஜப்பானைப் போலல்லாமல், ஜெர்மனி வலுவான ஏற்றுமதி தளத்துடன் அதிக வருமானம் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய பொருளாதார நாடாக உள்ளது. எனினும் உலகளாவிய வர்த்தகம் குறைதல், எரிசக்தி மாற்ற செலவுகள், வயதான மக்கள் தொகை என அதிகரித்துவரும் சவால்கள் ஜெர்மனியின் வளர்ச்சித் திறனை மட்டுப்படுத்தியுள்ளன.
ஜெர்மனியை விஞ்சுவதற்கு, பல ஆண்டுகளாக இந்தியா அதிக வளர்ச்சியைத் தக்கவைக்க வேண்டும். உள்நாட்டு தேவையின் தொடர்ச்சியான வலிமை. அதிகரித்து வரும் வருமானம், நகர்ப்புற நுகர்வு விரிவடைதல், கிராமப்புற வாங்கும் சக்தியை மேம்படுத்துதல் ஆகியவை வளர்ச்சியின் முதுகெலும்பாக இருக்க வேண்டும்..
மேலும் குறைந்த பணவீக்கத்தைப் பராமரித்தல், நிதி அழுத்தங்களை நிர்வகித்தல், நிலையான கொள்கை சூழலை உறுதி செய்தல் ஆகியவை இந்தியாவை ஏற்றத்தாழ்வுகளைத் தூண்டாமல் வேகமாக வளர அனுமதிக்கும்.
வலுவான வளர்ச்சி மற்றும் விலை நிலைத்தன்மையின் இந்த “கோல்டிலாக்ஸ்” கலவையை இந்தியா பாதுகாக்க முடிந்தால், ஜெர்மனியை முந்துவது மட்டுமல்லாமல், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் தனது நிலையை உறுதிப்படுத்தவும் முடியும் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பு…
















