முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்த 2 ‘பிரளய்’ ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பு.
ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறையிலும் இந்தியா தன்னிறைவு பாரதத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
இந்திய முப்படைகளுக்குத் தேவையான அதிநவீன ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை டி.ஆர்.டி.ஓ. தயாரித்து வருகிறது.
அந்த வரிசையில், ஒடிசாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இரண்டு பிரளய் ஏவுகணைகளை ஒரே ஏவுகலனில் இருந்து மிகக் குறைந்த நேர இடைவெளியில் செலுத்தி DRDO வெற்றிகரமான சோதனை செய்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக DRDO அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தச் சோதனை தொடர்பான வீடியோவை DRDO தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
DRDO மூத்த விஞ்ஞானிகள், இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது
‘பிரளய்’ என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, திட எரிபொருளால் இயங்கும் (Quasi-ballistic) ‘குவாசி-பாலிஸ்டிக்’ ஏவுகணையாகும். இது மிகத் துல்லியமான தாக்குதலை உறுதி செய்ய அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்தல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஏவுகணையாகும். எதிரி ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளிடம் சிக்காமல், நடுவானில் தனது பாதையை மாற்றிக்கொள்ளும் (Manoeuvrable) திறனும் இந்த ஏவுகணைக்கு உண்டு என்று கூறப்படுகிறது.
இந்த ‘பிரளய்’ ஏவுகணை பல்வேறு இலக்குகளுக்கு எதிராகப் பல வகையான போர்த் தளவாடங்களை (Warheads) சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.
மேலும், 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை வெடிபொருட்களை சுமந்து செல்லக் கூடிய இந்த ஏவுகணை 150 முதல் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை இந்த ஏவுகணை மிகத் துல்லியமாக அழிக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றிக்காக DRDO, இந்திய இராணுவம்,விமானப்படை சம்பந்தப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களுக்கும் இந்தப் பணியில் ஈடுபட்ட அனைத்து பணியாளர்களுக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரளய் ஏவுகணையின் இந்த ‘சால்வோ’ ஏவுதல் வெற்றிகரமாக முடிந்தது, ஏவுகணையின் நம்பகத்தன்மையை நிலைநாட்டியுள்ளது என்றும் ராஜ்நாத் கூறியுள்ளார்.
இந்தச் சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டி.ஆர்.டி.ஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், இந்த ‘பிரளய்’ ஏவுகணை அமைப்பு இந்தியப் பாதுகாப்புப் படைகளில் இணைக்கப்படுவதற்கு முழுஅளவில் தயாராக உள்ளது என்றும் உறுதிப் படுத்தியுள்ளார்.
















