தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து எம்ஜிஆரின் பெயர், மற்றும் புகைப்படம் நீக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக-வினருக்கு எம்ஜிஆர் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு இன்றுவரை மறையவில்லை என்பது அவர்களது செயல்கள் மூலம் வெளிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தி வந்த கருணாநிதியின் பெயரை வெட்கம் இல்லாமல் கழிவறை முதல் காவாங்கரை வரை வைக்கும் ஸ்டாலின், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்ஜிஆர் பெயரை நீக்கியது மமதையின் உச்சத்தைக் காட்டுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரசியலைப் பயன்படுத்தி ஊழல் செய்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த கருணாநிதி குடும்பத்தின் வஞ்சக நெஞ்சமும், நரித்தனமும் ஏற்கத்தக்கதல்ல எனவும், எம்ஜிஆரின் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதுபோன்ற வன்மத்தை கைவிட்டுவிட்டு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் எம்ஜிஆர் படத்தை உடனடியாக பதிவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, கருணாநிதியின் மொத்த குடும்பத்தையே வாழவைத்த எம்ஜிஆரின் புகழை அழிக்க நினைக்கும் ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















