மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தகர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் மத்திய அதி விரைவுப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகர ஜோதி விழா நடைபெறவுள்ள நிலையில், நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மகரஜோதி நாள் நெருங்கும்போது பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மத்திய அதிவிரைவு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி சன்னிதானம் முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை கமாண்டர் பிஜுராம் அறிவுரைகளை வழங்கினார்.
மத்திய அதிவிரைவு படையில் மொத்தம் 140 போலீசார் உள்ள நிலையில், மரக்கூட்டம், நடைப்பந்தல், திருமுற்றம், சன்னிதானம், பஸ்மக் குளம், அரவணை கவுன்ட்டர் ஆகிய இடங்களில் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















